Pages

Saturday, September 29, 2018

இலங்கை | கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன?

கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன? 

"குறைந்தபட்ச சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927ம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் (Minimum Wages Ordinance) கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணயசபை தாபிக்கப்படும் வரை நாட் சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை. 


குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் சம்பள சபை தாபிக்கப்பட்டது. அதில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.

1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதோடு 22 பிராந்திய கம்பனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களை அரச கூட்டுத்தாபனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் அரச பெருந்தோட்டயாக்கமும், எல்கடுவ பிளான்டேசன் எனப்படும் அரச பொறுப்பில் உள்ள கம்பனிகளும் முகாமை செய்து வருகின்றன. ஏனையவை சிறு தோட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டங்கள் பிராந்திய கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது ‘கூட்டு ஒப்பந்த’ அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்படவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் தொழிலாளர்களின் நாளுக்கான சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டது.

1994க்குப் பின்னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விடயத்திலிருந்து விலகிக் கொண்டது. அதன் பின் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களைக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன.

ஆரம்பத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), உடன் மாத்திரம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு பின்னர் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்ட தொழிங்சங்க கூட்டமைப்பு (JPTUC), ஆகியனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளாக கைச்சாத்திட்டன. இதுவே 1996ம் ஆண்டிலிருந்து கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது."

-நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்கள் 2015 டிசம்பரில் ஆற்றிய உரையின் பகுதி (நன்றி: கூட்டு ஒப்பந்த முறை மீளாய்வு செய்யப்படல் வேண்டும் - ஓத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பித்தார் திலகர் எம்.பி



கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன? 

1998ஆம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதுவரை பதினொன்று வரையிலான கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. புதிய கூட்டு ஒப்பந்தம் 2018 அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட வேண்டும். இதற்கடுத்த ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட வேண்டும். 

கூட்டு ஒப்பந்தம் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் மூலம் முறையாக அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு உயரும் அளவுக்கு தொழிலாளர்களுக்கு போதுமான வேதனம் கிடைப்பதில்லை. 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பல்வேறு பகுதிநேரத் தொழில்களைச் செய்து வருகின்றனர். மரக்கறி தோட்டம், சில்லறை வியாபார நிலையம், நகர்ப்புற தொழில்கள் என வருமானம் ஈட்டும் வழிகளை தேடிச் செல்கின்றனர். மேலும் ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் கொழும்பு போன்ற நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தொழில் செய்ய சென்றுவிட்டனர். 

தொடரும் சம்பள பிரச்சினை காரணமாக இப்போது மீதமிருக்கும் தொழிலாளர்களும் பெருந்தோட்டத் தொழிலைக் கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வளரும் தலைமுறையினரை கல்வியின் உதவியுடனோ கல்வி இல்லாமலோ எவ்வகையிலாயினும் பெருந்தோட்ட்டத் தொழிலில் இருந்து விடுவித்து நிரந்தர வருமானம் தேடும் வாழ்க்கை முறைக்குள் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர். 

கூட்டு ஒப்பந்தத்தை அரசு இல்லாதொழிக்குமா? 

கூட்டு ஒப்பந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது கூட்டு ஒப்பந்தம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டு இலங்கையில் ஏனைய தொழிலார்கள் அனுபவிக்கும் சம்பள உரிமைகளுடனான மாதச் சம்பளம் தரப்பட வேண்டும் என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய கோரிக்கையாகும். 

மக்கள் எதிர்பார்க்கும் இந்த மாற்றங்களை செய்ய அரசு தயங்குவது ஏன்? இது இலட்சக்கணக்கான தொழிலாளர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் ஆகும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அரசு கொண்டுவர முனைந்தால் பெருந்தோட்ட தனியார் நிறுவனங்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை முன்வைக்கும். 

அந்த எதிர்ப்பை சமாளித்தோ அல்லது மீறியோ தான் அரசு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெருந்தோட்டங்கள் தனியாருக்கு சொந்தமாக வழங்கப்படவில்லை, குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளது. அரசு பெருந்தோட்ட தனியார் நிறுவனங்களின் எதிர்ப்பை மீறி சட்டத் திருத்தம் செய்தால் பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களை மீள அரசாங்கத்திடம் ஒப்படைத்து வெளியேற முடிவெடுக்கலாம். 

பெருந்தோட்ட நிறுவனங்கள் அவ்வாறான முடிவொன்றை எடுக்குமானால் அரசுக்கு குத்தகை வருமான இழப்பு ஏற்படும். மேலும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப் பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்வது அரசுக்கு சிரமமானதாக அமையலாம். 

அரசு இதுவரை மலையக மக்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. மலையக பெருந்தோட்டத் தொழிலார்களுக்கும் அடிப்படை சம்பள உரிமைகள் வழங்கப்பட வேண்டும். 200 வருடங்களாக கூலித் தொழிலாளர்களாகவே வாழ்ந்து வரும் நிலை மாற வேண்டும். 

2018ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பது சாத்தியம் இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2020 இறுதியில் அல்லது 2021 தொடக்கத்தில் இடம்பெறலாம். விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளால் அதிருப்தியில் உள்ள தமிழ் மக்களை மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் அமைதிப்படுத்த முடியும். நல்லாட்சி அரசாங்கம் மலையகத்துக்கும் நல்லாட்சியை வழங்குமா? 

கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன? 
http://sigaram2.blogspot.com/2018/09/plantation-collective-agreement-srilanka.html 
#மலையகம் #கூட்டுஒப்பந்தம் #நல்லாட்சி #மைத்திரி #ரணில் #ஐதேக #அரசு #தமிழர்கள் #மக்கள் #தேர்தல் #ஜனாதிபதி #தேயிலை #சம்பளம் #சிகரம் 

No comments:

Post a Comment