Pages

Wednesday, September 26, 2018

இலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை

மலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த நிறுவனம் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது. ஆனால் இது முழுமையான அரச நிறுவனம் அல்ல. ஆகவே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இதுநாள் வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. 


ஆகவே அமைச்சர் பழனி திகாம்பரம் 'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை' சட்டமூலத்தை உருவாக்கி நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இது முழுமையான அரச நிறுவனமாக இருப்பதுடன் மலையக மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை இலகுவாக செயல்படுத்த உதவியாக இருக்கும். மேலும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்குத் தடையாக இருந்த சரத்துகளை நீக்குவதற்கான சட்டமூலமும் சமர்ப்பிக்கப்பட்டது. 2018/09/19 அன்று இந்த சட்டங்கள் நாடாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டன. 

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதி, கல்வி அபிவிருத்தி, சமூக பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நிறைவேற்றக்கூடியதாக இருக்கும். ஆனால் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்த அதிகார சபை எந்தவிதத்திலும் பயனளிக்காது என்பது உற்று நோக்கப்பட வேண்டியதாகும். 


மலையக அபிவிருத்தி அதிகார சபை என சட்டம் குறிப்பிடவில்லை. பெருந்தோட்டம் என்னும் பதத்தையே இச்சட்டமும் உபயோகப்படுத்துகிறது. மேலும் மலையக மக்களின் முக்கியமானதும் தீர்க்கப்படவேண்டியதுமான பிரச்சினையான சம்பளப் பிரச்சினையை இந்த அதிகார சபையால் தீர்க்கவே முடியாது. மலையக மக்களை தேசிய அபிவிருத்தித் திட்டத்தில் இணைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஏன் அதைவிட முக்கியமானது அவர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதும் முக்கியமானது. 

மலையக மக்களும் மாத சம்பளம், மேலதிக நேர வேலைக்கொடுப்பனவு, வரவுக் கொடுப்பனவு உள்ளிட்ட தேசிய மக்களும் அனுபவிக்கும் சம்பள உரிமைகளை அனுபவிக்க வேண்டும். நீண்ட காலமாகவே சம்பளப் பிரச்சினைக்காக மலையக மக்கள் போராடி வருகின்றனர். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு மக்களை வஞ்சித்து வருகின்றனர். 

கடந்த 2018/09/23 திகதியன்று மலையகம், தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தத்தையும் ஆதரவையும் வழங்குவதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிவந்தால் நிறுவனங்களைத் துரத்தியடித்து பெருந்தோட்டங்களை தோட்டத் தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுப்போம் என அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சூளுரைத்துள்ளார். 

பெருந்தோட்ட நிறுவனங்களிடம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் உரிமை இருக்கும்வரை இந்த சம்பளப் பிரச்சினை தீரப்போவதில்லை. ஆகவே ஒன்று அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்க வேண்டும், அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல் மலையகத்தின் அடையாளமான தேயிலைத் தொழில் அழிவதற்கு அரசு எவ்வகையிலும் இடம்தரக் கூடாது. 

2018ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்தம் இன்னும் கைச்சாத்திடப்படவில்லை. இவ்வருட இறுதிக்குள் கூட்டு ஒப்பந்தம் கைச்சத்தாக வேண்டும். 25 நாள் நிரந்தர வேலையுடன்  நாளுக்கான மொத்தக் கொடுப்பனவு 1250 ரூபாவுக்குக் குறையாததாக அமைய வேண்டும். மேலும் இக்கூட்டொப்பந்தம் வெகுவிரைவில் இல்லாதொழிக்கப்பட்டு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும். அந்த நாள் மலையகத்தின் பொன்னாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 



#மலையகம் #தேயிலை #இறப்பர் #பெருந்தோட்டம் #தொழிலாளர்கள் #கூலிகள் #கூட்டுஒப்பந்தம் #இலங்கை #ஈழம் #சிங்களம் #தமிழ் #அரசியல் 

No comments:

Post a Comment