Pages

Tuesday, September 18, 2018

இலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து - டாலர் பெறுமதி - தரமற்ற எண்ணெய் - படகு விடுவிப்பு - மனித அபிவிருத்தி சுட்டெண்

இன்று (18/9) செவ்வாய்க்கிழமை ஹபரண பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலில் மோதுண்டு இறந்துள்ளன. இரண்டு குட்டி யானைகளும் அவைகளின் தாயான கர்ப்பமான யானையுமே உயிரிழந்துள்ளன. எண்ணெய்த் தாங்கி ரயிலினாலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கையில் தற்போது 7500 வரையிலான யானைகள் உள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் 375 பேர் யானைகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 166 ரூபாவை கடந்தது. ஒரு அமெரிக்க டொலரை விற்கும் பெறுமதி 166.64 ரூபாவாகவும் வாங்கும் பெறுமதி 163.10 ரூபாவாகவும் பதிவானது. இதுவே அதிகமான நாணயப் பெறுமதி வீழ்ச்சியாகும். 

Image Credits to its owner only

இலங்கையில் சமையல் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யில் 75%மானவை பாவனைக்கு உதவாதவை என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 2016 முதல் சந்தையில் கிடைக்கப்பெற்ற மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தரமற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இலங்கை கடற்படையினால் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 2015ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் 173 படகுகளை விடுவிக்குமாறு இலங்கை அரசு மீன்பிடி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. செப்டெம்பர் 7ஆம் திகதியிடப்பட்ட அந்த உத்தரவில் படகுகளை மட்டும் விடுவிக்கப்படும் மீன்பிடி உபகரணங்கள் விடுவிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2017ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 76ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆரோக்கியம், கல்வி மற்றும் வருமானம் ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வழியாக இந்த சுட்டெண் கணிப்பிட்டு வெளியிடப்படுகிறது. 1990ஆம் ஆண்டில் இலங்கை 0.625 மதிப்பெண்களைப் பெற்றிருந்ததுடன் 2017இல் 23.2வீத அதிகரிப்புடன் 0.770 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. 189 நாடுகள் இந்த தரவரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நோர்வே, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தரவரிசையில் முன்னணியில் உள்ளன. 

#HDI #GNI #UNDP #SriLanka #LKA #LK #Elephant #USD #USDollar #IndianFishermen #LKGovt #SLEconomy #TrainAccident #TravellingLanka #SigaramNews 

No comments:

Post a Comment