Pages

Saturday, September 22, 2018

இலங்கை | இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அடுத்தடுத்து இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் துணையுடன் முறியடித்து ஆட்சியைப் பிடித்தார் மைத்திரிபால.


முதல் நாள் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றாக அமர்ந்து அப்பமும் தேநீரும் சாப்பிட்ட மைத்திரிபால அடுத்தநாள் எதிரணியின் பொது வேட்பாளராக ஆனார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தும் மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்தும் மைத்திரிபாலவை ரகசியமாக எதிராணிக்குக் கடத்தியதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கு முக்கியமானது.




மைத்திரிபால ஜனாதிபதியானதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியையும் கைப்பற்றிக்கொண்டார். இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பல கட்சிகளைச் சார்ந்த மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூட்டு எதிரணி (Joint Opposition) என்னும் பெயரில் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்தனர். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்னும் பெயரிலான கட்சியின் கீழ் மஹிந்த செயல்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டாட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் உள்ளனர். இரு கட்சிகளுமே தனித்து ஆட்சியமைக்க முயன்று பின்னர் அது முடியாமல் போகவே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை கூட்டணி ஆட்சியைத் தொடர முடிவெடுத்துள்ளன. ஏதேனும் ஒரு கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைப்பது உறுதியானால் இந்த ஆட்சி கவிழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோ அல்லது கூட்டு எதிராணியோ மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. ஒருவேளை மைத்திரிபாலவுக்கு அவர்கள் ஆதரவளிக்க முடிவெடுத்தால் மைத்திரிபால அல்லது மஹிந்த இருவரில் ஒருவரின் தலைமையில் ஆட்சி அமையலாம். ஆனால் அதன் பின்னர் மைத்திரிபால மஹிந்தவால் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு பழிதீர்க்கப்படுவார்.

மக்கள் இந்தக் கூட்டாட்சியை இப்போது விரும்பவில்லை. மஹிந்தவின் கடும்போக்கு ஆட்சிக்கு மாற்றாகவே இந்தக் கூட்டாட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் இப்போது அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகியுள்ளனர். கூட்டாட்சியில் இரு கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இல்லை. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் வாழ்க்கைச் செலவு முன்பை விட அதிகரித்திருக்கிறது.

2020 அல்லது 2021ஆம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம். மைத்திரிபால சிறிசேன இரண்டாம் முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமானால் மைத்திரிபால ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாகக் களமிறங்கலாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேறு யாரேனும் ஒருவர் தன்னை முன்னிறுத்துமாறு உரிமை கோரலாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த கூட்டாட்சிக்கு சாத்தியம் இல்லை. ரணில் விக்கிரமசிங்க 2030ஆம் ஆண்டு வரை தானே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ரணில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால் ரணிலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து அகற்ற கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை வெற்றியளிக்கவில்லை.

மக்களும் ரணிலின் தலைமைத்துவத்தை விரும்பவில்லை. சில வேளைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக வேறு வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்காக நிறுத்தப்பட்டு ரணில் மீண்டும் பிரதமராக முயற்சிக்கலாம். இந்த முயற்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான பலனைத் தரக்கூடும். நீண்ட கால தொடர் தோல்விகளுக்கு இது நல்ல மருந்தாகவும் அமையும்.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இல்லை. மூன்றாம் முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருவர் போட்டியிட முடியும் என்று மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட அரசியலமைப்புத் திருத்தம் தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. ஆகவே மஹிந்த பிரதமராக வேண்டுமானால் தேர்வு செய்யப்படலாம். கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதிப் பதவிக்கு முன்னிறுத்தலாம். கடந்த முறை போலவே இந்த முறையும் இப்போதைய ஆட்சியின் மீதான அதிருப்தி மஹிந்தவுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தரலாம்.

இந்த மூன்று கட்சிகள் தவிர்த்து வேறு கட்சிகள் எவையும் இலங்கையில் ஆட்சியமைக்கும் சாத்தியம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறை ஜனாதிபதி ஆக முடியாமல் போனதில் தமிழ் மக்களின் பங்கு அதிகம். மஹிந்த மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தமிழ் அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கிறது. 

அரசியலில் திடீர் திருப்பங்கள் நிகழலாம். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்கிற கேள்விக்கான பதில் 2019இலேயே கூட கிடைக்கலாம். காலத்தின் கணக்கை யாரறிவார்? இன்னும் இரண்டு வருடங்களே இப்போதைய ஆட்சியில் எஞ்சியிருக்கின்றன. 2019 ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைப் போன்று மாகாண சபைத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை பெறும் பட்சத்தில் 2019 நடுப்பகுதியிலேயே ஜனாதிபதித் தேர்தலும் நடக்கலாம். யார் யார் யாரோ? அடுத்த ஜனாதிபதி யாரோ? 

#LK #LKA #SriLanka #Elections #PresidentialElection #PresidentialElection2021 #MahindaRajapaksha #Maithripala #Ranil #UPFA #SLPP #UNP #Gotabaya #SigaramNews 

No comments:

Post a Comment