Pages

Friday, November 2, 2018

இலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?

இலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டமை, வாக்குரிமை பறிக்கப்பட்டமை, இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்பட்டமை, பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை போன்ற பிரச்சினைகளை மலையக மக்கள் சந்தித்துள்ளனர். 

இவற்றில் கடந்த இருபது ஆண்டுகளாக மலையக மக்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சினை சம்பளப் பிரச்சினை ஆகும். 90களில் பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. இதனையடுத்து 1998இல் இருந்து கடந்த இருபது வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த முறை மூலமாகவே சம்பளம் நிர்ணயித்து வழங்கப்பட்டு வருகிறது. 

ஒரு சில தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இணைந்து கூட்டு ஒப்பந்த சம்பளத்துக்கான இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படவேண்டிய இவ்வொப்பந்தம் உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆதலால் பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தை ஈட்டிக்கொள்கின்றன. 



2018ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது பேசப்பட்டு வருகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரதேசங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி சக தொழிற்சங்கங்களுடன் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது. வடக்கு-கிழக்கு தமிழ் உறவுகளும் கூட சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர். 

இப்போது 2018ஆம் ஆண்டுக்காக 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். போராட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை எல்லோரும் மறந்துவிடுவோம். மீண்டும் 2020ஆம் ஆண்டில் இதே கூட்டு ஒப்பந்த சம்பள விவகாரம் பிரச்சினையாக நம் கண் முன்னால் வந்து நிற்கும். அப்போதும் இலங்கை முழுவதும் போராட்டம் நடாத்தப்படுமா? இப்படியே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை போராட்டங்கள் மூலமாகத்தான் நாம் சம்பள உயர்வைப் பெற வேண்டுமா? இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? 

2018ஆம் ஆண்டுக்காக 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும் அது முறையாக தோட்டத் தொழிலாளர்களைச் சென்றடையாது. குறைந்த பட்ச கொழுந்தின் அளவு, வருகை, வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை என எல்லாமும் சேர்ந்து தான் முழுமையான சம்பளத்தைத் தீர்மானிக்கும். மாதாந்தம் குறைந்த பட்சம் , 20000 - 25000 ரூபா மொத்த வருமானமாக ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியும் பெறுவார் என உறுதி கூற முடியாது. 

பெருந்தோட்ட நிறுவனங்கள் வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஒரு நாளில் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை அதிகரிப்பார்கள். அல்லது தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தை வேண்டுமென்றே தரமற்ற கொழுந்தைக் கழிப்பதாகக் கூறி அளவை குறைத்து நிறுப்பார்கள். இதையெல்லாம் தினமும் நம்மால் கண்காணித்துக் கொண்டிருக்க முடியுமா? 

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? ஒன்று கூட்டு ஒப்பந்தத்தை திருத்த வேண்டும் அல்லது முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த வேண்டும். போதிய அடிப்படை சம்பளம், வரவுக்கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவுகள் ஆகியன முறையாக வழங்கப்படுமாறு உறுதி செய்ய வேண்டும். மேலும் வருடாந்த அடிப்படையில் 10%த்துக்கும் குறையாத வகையில் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படுவதையும் புதிய கூட்டு ஒப்பந்தம் உறுதிப்படுத்த வேண்டும். 

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் இலங்கை அரசு நேரடியாகத் தலையிட வேண்டும். நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் சம்பளப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மலையக மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முழுமையான தீர்வை அரசாங்கம் வழங்காவிட்டாலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையையாவது தீர்த்து வைக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். 

இலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது? 
https://sigaram2.blogspot.com/2018/11/when-finish-up-country-salary-issue.html 
மலையகம் | கூட்டு ஒப்பந்தம் | முதலாளிமார் சம்மேளனம் | தொழிற்சங்கங்கள் | இலங்கை அரசு | தேயிலை | இறப்பர் | பெருந்தோட்ட நிறுவனங்கள் | சம்பள உயர்வு | நல்லாட்சி | சிகரம் செய்திகள்

No comments:

Post a Comment