Pages

Monday, April 8, 2019

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்

யார் மலையகத் தமிழர்? 

மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள். கூலித்தொழிலாளர்கள் என்னும் அடிப்படையிலேயே அவர்கள் முதலில் வந்திருந்தனர். காலஞ் செல்லச்செல்ல அவர்களுக்கும் வாழ்வியல் மற்றும் அரசியல் ரீதியான உரிமைகள் வழங்கப்பட்டன. எனினும் 1948ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் மலையகத் தமிழர்களை வெகுவாகப் பாதித்தன. 


1921ஆம் ஆண்டில் சுமார் 6 இலட்சம் மலையகத் தமிழர்கள் இலங்கையில் இருந்தனர். 1964 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 975,000ஆக அமைந்தது. தொடர்ந்து 1964ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 450,000 பேர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1971ஆம் ஆண்டளவில் மலையகத் தமிழர் எண்ணிக்கை 11,75,000 ஆக அமைகிறது. எனினும் இந்த எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 850,000 பேராக அமைந்துள்ளது. 

மலையகத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தபோது பசியாலும் பட்டினியாலும் அவதிப்பட்டார்கள். இலங்கைக்கு அழைத்து வரப்பட்டபின் அடிமைகளாக்கப்பட்டனர். பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபின் நாடற்றவர்களானார்கள். நாடற்றவர்களாக்கப்பட்ட பினனர் அரசியல் உரிமைகளை இழந்தனர். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ இழப்பு, பிரதேச இழப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆளானார்கள். சொந்த நிலத்துக்காகவும் சம்பளத்துக்காகவும் போராடுவதிலேயே முடிந்து போகும்படியாக அவர்களது வாழ்க்கை இன்றளவிலும் அமைந்திருக்கிறது. 

1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டன. 2090ஆம் ஆண்டுவரையில் அவை தனியார் வசமிருக்கும். மலையகத் தமிழரின் சனத்தொகை குறைவடைந்தது போலவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் காலத்துக்குக் காலம் குறைவடைந்து வந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் சுமார் 350,000 தொழிலாளர்களே பெருந்தோட்டத் துறையில் பணிபுரிகின்றனர். 

காணிப்பிரச்சினையும் சம்பளப் பிரச்சினையும் இன்னும் பல தசாப்தங்களுக்குத் தொடருமானால் பெருந்தோட்டத்துறை முழுமையாக அழிவுக்குள்ளாகலாம். 

Image Credit: Google


அரசியல் தீர்வில் மலையகத் தமிழர்கள் 

அரசியல் தீர்வு தொடர்பில் மலையகத் தமிழரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. சம்பளப் பிரச்சினைக்கே தினம் தினம் போராடுபவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இயலவில்லை. வடகிழக்கு தமிழர்கள் நிலவுரிமையையும் தொழில் நிலைத்தன்மையையும் இயல்பாகவே பெற்றிருப்பதால் அடுத்த கட்டமான சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையில் அடியெடுத்து வைத்துவிட்டனர். 

மலையகத் தமிழர்களுக்கும் நிலையான பெருந்தோட்டத் தொழிலும் நிலவுரிமையும் அமையுமானால் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிலை உருவாகும். ஆகவே அந்த நிலை உருவாகிவிடாமல் தடுப்பதில் பேரினவாதிகள் மிகக் கவனமாகவே இருக்கிறார்கள். என்றாலும் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கவும் முடியாது. மலையகத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்து இதுவரை எந்தவொரு மலையகத் தலைவர்களும் வாய் திறக்கவில்லை. 

அவர்கள் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து தமது வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே எதிர்பார்க்கிறார்கள். வடகிழக்கு அரசியல் வாதிகளைப் போல மலையக அரசியல் வாதிகள் தனித்து இருப்பதில்லை. எப்போதுமே ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்துக்கு இணக்கமாகவே செயற்பட்டு வந்திருக்கிறார்கள். 

வடகிழக்கு அரசியல் வாதிகள் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்துப் பேசும்போது வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண மக்களை மட்டுமே கருத்தில் கொண்டிருந்திருக்கிறார்கள். மலையகத் தமிழர்களை சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையில் அவர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. தனித் தமிழீழம் அல்லது சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைகள் வடகிழக்கு தமிழர்களை மட்டுமே முன்னிறுத்தி முன்வைக்கப்பட்டதன் காரணமாக உலகத் தமிழர்களின் மத்தியில் இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசம் என்றால் அது வடகிழக்கு மட்டுமே என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாகியிருக்கிறது. 

தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர் குறித்துப் பேசும்போது கூட வடகிழக்கு தமிழர் குறித்தே பேசுகிறார்கள். அவர்களின் நேரடி தொப்புள் கொடி உறவான மலையகத் தமிழர்களை மறந்துவிட்ட நிலையே காணப்படுகின்றது. இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் பேசுவதெல்லாம் வடகிழக்கு தமிழர்களைப் பற்றியதேயன்றி மலையகத் தமிழர்களைப் பற்றியல்ல. 

தற்போது இலங்கை அரசின் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் வடகிழக்கை நோக்கி அமைந்திருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இருக்கிறது. இன்றைக்கும் ஆயுதப் போராட்டம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது என்பதையும் எப்போது வேண்டுமானாலும் நெருப்பு பற்றியெரியலாம் என்பதையும் ஆட்சியாளர்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள். 

ஆனால் மலையகத் தமிழர்கள் மீது இலங்கை அரசுக்கு அவ்வாறானதொரு தேவை இல்லை. மலையகத் தமிழர்களை பெருந்தோட்டங்களோடு சேர்த்து குத்தகைக்கு விட்டுவிட்டதனால் அவர்களைப் பற்றி இப்போதைக்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இலங்கை அரசு ஆரம்பம் முதலே மலையகத் தமிழர்களுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்பட்டு வருகின்றது. இன்னமும் அவர்கள் மலையகத் தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. 



சம்பளப் போராட்டம் 

2018ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் பல கட்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரியிருந்தனர். எனினும் கூட்டொப்பந்தத்தின் மூலம் 700 ரூபா வரையே அதிகரிக்க முடிந்திருக்கிறது. நாளொன்றுக்கு 1281 ரூபா வரை வழங்கக்கூடிய இயலுமை இருப்பதாக தொழிற்சங்கமொன்று கருத்துத் தெரிவித்திருந்தது. 

இலங்கையில் சாதாரணமாக கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் 1,500 ரூபாவைப் பெறக்கூடியதாக உள்ளது. இதில் மூன்று வேளை அல்லது இரண்டு வேளை உணவு உள்ளடங்கலாகவோ அல்லது இல்லாமலோ பெற்றுக் கொள்கிறார்கள். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் இலக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1,500 முதல் 2,000 ரூபாவாக இருக்கிறது. ஆடைத் தொழிற்சாலை போன்றவற்றில் மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாவுக்குக் குறையாமல் பெற்றுக் கொள்ள முடிகிறது. 

2018ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வுக்கான கூட்டொப்பந்தத்துக்காக மலையகத்துக்கு வெளியில் இருந்து ஆதரவுக் குரல்கள் கிடைக்கப்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். இக்கட்டுரை எழுதப்படும்போது வவுனியா இளைஞர் ஒருவர் சைக்கிளில் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து வலம் வந்து கொண்டிருந்தார். வட மாகாண ஆளுநர் 10,000 கையெழுத்து வேட்டையை துவக்கியிருந்தார். முன்னதாக பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் புரிவோர் என பல தரப்பினரும் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அடையாள வேலை நிறுத்தம், வீதி மறியல், சட்டப்படி வேலை போராட்டம், கொழும்பில் ஆர்ப்பாட்டம் என தம்மாலான வழிகளில் முயன்றிருந்தனர். ஆனால் வேலை நிறுத்தம் என்கிற ஆயுதத்தை வலுவாகப் பிரயோகித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனினும் இதற்கு மேல் தொழிலாளர்களால் வலுவாக எதனையும் செய்ய முடியாது என்பதே உண்மை. தொடர் போராட்டம் அவர்களது வருமானத்தை பாதிக்கும். தொழிலை இழக்க நேரிடலாம். தொழிலை இழந்தால் வீடு பறிபோகும். ஊழியர் சேமலாப நிதியைப் பெறுவதில் சிக்கல் தோன்றும். இதையெல்லாம் கடந்து போராடுவது சுலபமில்லை. 

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனக்கு விசாரணை செய்ய அதிகாரமில்லை என்று நீதிமன்றமே ஒதுங்கிக் கொண்டதைக் கண்டோம். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருக்கிறாரா என்பதை விசாரித்து தீர்ப்பளிக்க முடிந்த நீதிமன்றத்திற்கு, கூட்டு ஒப்பந்தத்தை விசாரிக்க அதிகாரமில்லை என்பது எதைக் காட்டுகிறது? வேலை நிறுத்தப் போராட்டத்தால் தொழிலாளி வேலையை இழந்தால் அதனை அதே நீதிமன்றம் பெற்றுக் கொடுக்குமா? 

அரசியல் தீர்வு 

இலங்கைத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை எனும் போது அதில் மலையகத் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும். கடந்த 200 ஆண்டுகளாக தம் கடின உழைப்பால் பொன் விளையும் பூமியாக மாற்றிய பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டு மலையகத் தமிழர்களுக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். மலையகத் தமிழர்களின் சம்பளப் பிரச்சினைக்கும், காணிப் பிரச்சினைக்கும், வீட்டு உரிமைக்கும் அதுவே சரியான தீர்வாக அமைய முடியும். 

நாங்கள் ஐம்பது ஆண்டுகளாக சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகிறோம். ஐந்து நிமிடம் கூட போராடாத உங்களுக்கு சுய நிர்ணய உரிமை தருவதா எனப் பலர் கொதித்தெழக் கூடும். ஏன், நாங்களும் மனிதர்கள் தானே? நாங்களும் இலங்கையர்கள் தானே? 200 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தை முதுகில் சுமந்தவர்கள் நாங்கள் தானே? ஆகவே நாங்களும் சுய நிர்ணய உரிமை பெறுவதில் என்ன தவறு? என்பதே அவர்களின் பதிலாக இருக்கும். 

மலையகத்தில் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அதனைச் சாராதவர்களும் இருக்கிறார்கள். மறக்கறி, விவசாயம், வணிகம், கற்பித்தல், அரச நிர்வாகம், சுய தொழில் முயற்சி எனப் பல துறை சார்ந்தும் மலையக மக்கள் இயங்கி வருகிறார்கள். கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரிபவர்கள் இருக்கிறார்கள். வடகிழக்கிற்கு இடம்பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 

மலையகத் தமிழருக்கு என்று தனி அடையாளம் கிடையாது. இன்றும் அவர்கள் இந்தியத் தமிழராகவே நோக்கப்படுகிறார்கள். பிறப்புச் சான்றிதழில் மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தப்பட வேணடும் என பல காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மலையகத் தமிழர் எனும் அடையாளமே கேள்விக் குறியாயிருக்கிற போது சுய நிர்ணய உரிமையைப் பெறுவது ஒன்றும் இலகுவாக இருக்கப் போவதில்லை. 

மலையக அரசியல் கட்சித் தலைவர்களோ, தொழிற்சங்கத் தலைவர்களோ சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என நம்ப முடியாது. சம்பளப் பிரச்சினைக்கே முறையாகக் குரல் கொடுக்காதவர்கள் சுய நிர்ணய உரிமைக்காக மட்டும் முன் வரிசைக்கு வந்து விடுவார்களா? அதெல்லாம் இன்னுமொரு 100 வருடம் போகட்டும் பார்க்கலாம் என்பார்கள். அல்லது வடகிழக்கிற்கு கிடைத்தால் பிறகு நாம் பார்க்கலாம் என்பார்கள். 

இளம் மலையக சமூக இளைஞர்கள் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். வடகிழக்கு அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். வடகிழக்கு அரசியல் வாதிகளும் தாமாக முன்வந்து மலையகத்தையும் சுய நிர்ணய கோரிக்கைக்குள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மலையகத் தமிழர்களும் இணையும் போது கோரிக்கை இன்னும் பலமுள்ளதாக மாறும். அரசுக்கு இன்னும் நெருக்கடியையும் அழுத்தத்தையும் கொடுக்கும். 

நாடாளுமன்றத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தாலே அது பெரும் சக்தியாக விளங்கும். ஓரணியாக, ஒரே கூட்டணியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்தால் அரசு நிச்சயம் பணியும். நாம் ஒன்றிணைய மாட்டோம் என்பதே அவர்களின் மாபெரும் நம்பிக்கை. வடகிழக்கும் மலையகமும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதே பேரினவாதிகளின் பலம். அந்த பலத்தை நாம் தகர்த்தெறிய வேண்டும். 

மலையகத் தமிழர்களின் பூர்வீகம் இந்தியா என்பதெல்லாம் பழைய வரலாறு. மலையகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களே. இலங்கைத் தமிழர்கள் என்ற ரீதியில், இலங்கையில் வாழும் தனித்துவமிக்க ஒரு சமூகம் என்ற ரீதியில் அவர்களுக்கும் சுய நிர்ணய உரிமை கோர , உரிமை இருக்கிறது. தமக்கான நிலத்தில் தமக்கான உரிமையுடன் வாழ வேண்டும் என்கிற கனவு மலையகத் தமிழருக்கும் உண்டு. அந்தக் கனவு நிறைவேறுமா? 

குறிப்பு: இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டு சனிக்கிழமை, மார்ச் 16, 2019 ஆம் திகதிக்குரிய 'மக்கள் பத்திரிக்கை' இரு வார இதழில் வெளியான கட்டுரையாகும். 

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும் 
https://sigaram2.blogspot.com/2019/04/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum.html 
#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை 

2 comments:

  1. upcountry people we must need our rights.

    ReplyDelete
  2. புதிய மலையக அரசியல் இயக்கம் எழுச்சி பெற வேண்டும்.
    அது தேசிய அரசியல் இயக்கமாக மாற வேண்டும்.
    நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் தூண்களாக விளங்கும் எம்மவரின் பலம் அறியப்பட வேண்டும், அறிவிக்கப்பட வேண்டும்.
    நாட்சம்பளத்திக்காக போராடும் நிலை மாறி ஏனைய தொழில் துறைகளை போல் மாதச்சம்பள நடைமுறை கொணரப்பட வேண்டும்.

    கல்வி, அறிவியல், தொழினுட்பம், அரசியல், சூழல், கலை போன்ற அனைத்து துறைகளிலும் நம்மவர் ஆளுமை பெற வேண்டும். ஆளுமை பெற்ற கல்வியலாளர்கள் நம் சமூகத்திற்காக வெளிவர வேண்டும். அவர்கள் எம் சமூகத்தின் அடையாளங்களாக பறைசாற்றப்பட வேண்டும்.

    மலையகத்தான் என்றால் 'கொழுந்து கூடை'யும் 'அரைப் படங்கு'ம் மட்டுமே அடையாளம் என்ற நிலையை கல்வி எனும் ஆயுதம் கொண்டு தகர்த்தெறிய வேண்டும்.

    "நான் மலையகத்தான்" என்று வீறு கொண்டு சொல்லும் நிலையை எம் சந்ததியினருக்கு கொடையாக வழங்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கின்றோம்.

    அறிவு பூர்வமான அரசியலில் நாம் அதிகாரம் செலுத்தாத வரை இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் நாம் கூன் விழுந்தவர்களாகவே பிறந்து, கூன் விழுந்தவர்களாகவே வாழ்ந்து, கூன் விழுந்தவர்களாகவே இறப்போம். இது உறுதி.

    ReplyDelete