இன்று தொலைக்காட்சிகள் நம்மிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு தேவைக்காக தொலைக்காட்சிகளை நாடுகிறோம். இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவே யூடியூப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் கூட வந்துவிட்டன. ஒரு திரையரங்கின் அளவுக்கு பாரிய திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட விற்பனைக்கு வந்துவிட்டன.
தமிழ்த் தொலைக்காட்சித் துறையைப் பொறுத்தவரை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மட்டுமல்லாது உலகில் தமிழர்கள் பரந்துவாழும் நாடுகள் பலவற்றில் இருந்து பல்வேறு தொலைக்காட்சி சேவைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் மக்களுக்கு பயனுள்ள விடயங்களைக் கொண்டு சேர்த்த தொலைக்காட்சிகள் இப்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன.
தமிழ்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகள் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பலரின் இல்லங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. நெடுந்தொடர்களை நம்பி பல தொலைக்காட்சிகள் இயங்கி வருகின்றன. காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இரண்டு வருடங்கள் வரை ஒவ்வொரு தொடர்களும் ஒளிபரப்பாகின்றன. ஏழு எட்டு வருடங்கள் வரை ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களும் உண்டு.
கள்ளக்காதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மாமியாரை விரட்டுதல், மருமகளை பழி வாங்குதல், இரண்டு குடும்பம் நடத்துதல், ஆள்மாறாட்டம் இவ்வாறான சம்பவங்களே நெடுந்தொடர்களின் கதைகளாக இருக்கின்றன. உலகில் உள்ள அத்தனை கெட்ட செயல்களையும் பெண்கள் துணிந்து செய்வதாக இந்த நெடுந்தொடர்கள் காண்பிக்கின்றன.
நெடுந்தொடர்களின் முக்கிய இலக்கு பெண்கள் தான். வீட்டிலிருக்கும் பெண்களும் வயதானவர்களும் இந்த நெடுந்தொடர்களின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கூட வேலை முடிந்து வந்ததுமே நெடுந்தொடர்களில் மூழ்கி விடுகின்றனர்.
பெண்கள் துணிந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு இந்த நெடுந்தொடர்கள் கற்றுத்தருகின்றன. மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக காட்சிகள் கட்டமைக்கப்படுவதால் நெடுந்தொடர்களை உண்மை போலவே இல்லத்தரசிகள் நம்பி விடுகிறார்கள்.
செய்தித் தொலைக்காட்சிகள் தேவையற்ற விடயங்களை விவாதப் பொருளாக்கி மக்களை தவறாக வழிநடத்துகின்றன. அரசியல் தலைவர்கள் தும்மினால் கூட அவசரச் செய்தியாக்கி மக்களை பயமுறுத்துகின்றன. செய்தித் தொலைக்காட்சிகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில்லை. மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை.
தொலைக்காட்சிகளில் ஆங்கிலம் கலந்த தமிழே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியைக் காப்பாற்றவோ வளர்க்கவோ தமிழ் ஊடகங்கள் ஒரு போதும் முயற்சி செய்வதில்லை. எல்லாவற்றையும் வணிக ரீதியாகாவே தொலைக்காட்சிகள் அணுகுகின்றன. ஒரு மக்கள் பிரச்சினையை வெளிக்கொணர்வதற்குக் கூட அதன் மூலம் வணிக ரீதியாக ஆதாயம் தேட முடியுமானால் மட்டுமே மக்களிடம் கொண்டு செல்கின்றன.
தமிழ்த் தொலைக்காட்சிகள் காலத்தின் தேவையறிந்து செயலாற்ற வேண்டும். நெடுந்தொடர்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச வேண்டும். கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசியல் தலைவர்களுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்து மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்த வேண்டும்.
உலக அரங்கில் தமிழ் மொழியும் தமிழர்களின் இருப்பும் கேள்விக்குறியாகி வரும் நிலையில் தமிழ்த் தொலைக்காட்சிகள் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். காட்சி ஊடகமான தொலைக்காட்சி சக்தி வாய்ந்த ஓர் ஊடக அமைப்பாகும். அந்த சக்தியை தமிழ்த் தொலைக்காட்சிகள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவார்களா?
உலகம் | தமிழ்த் தொலைக்காட்சிகளும் நமது எதிர்காலமும்
http://sigaram2.blogspot.com/2018/10/tamil-telivisions-and-our-future.html
#தமிழ் #தொலைக்காட்சி #மக்கள் #அரசியல் #வணிகம் #தீர்வு #உலகம் #வரலாறு #வலைத்தளம் #செய்தி #நாடகம் #அறிவிப்பு #சிகரம்
No comments:
Post a Comment