Pages

Wednesday, October 3, 2018

இலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை

தற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இயற்கை எல்லா வழிகளிலும் மாசடைந்து வருகிறது. உலகின் காலநிலை அமைப்பு படிப்படியாக மாறி வருகிறது.


அண்மைக்காலங்களில் அதிகளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைக் காண்கிறோம். உயிரிழப்புகளும் பொருள் சேதமும் பெரும் எண்ணிக்கையில் நிகழ்வதையும் நாம் காண்கிறோம்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இவை எதனால் நிகழ்கின்றன? இயற்கைக்கு நம் மேல் ஏன் இத்தனை கோபம்? திடீர் காலநிலை மாற்றங்கள் எதனால் நிகழ்கின்றன? இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?


கொட்டைகலை குடா ஓயா பிரதேசம்

இலங்கையில் மலையகம் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசமாகும். மலையகத்தை இயற்கையின் உறைவிடம் என்று கூட குறிப்பிடலாம். இப்படிப்பட்ட மலையகத்தின் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறி தான்.

மலையகத்தில் இயற்கை அனர்த்தங்களில் முக்கியமானது மண்சரிவு. மலைப்பாங்கான பகுதிகளைக் கொண்ட பிரதேசம் என்பதால் மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. மண்சரிவுக்கு இயற்கைக் காரணிகள் ஒரு பக்கம் என்றால் செயற்கைக் காரணிகளுக்கும் முக்கிய பங்குண்டு.

மலையகத்தின் பல இடங்களில் மலைப்பகுதிகளைக் குடைந்து கல் உடைக்கும் வேலை நடந்து வருகிறது. பாரிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி கருங்கல் உடைக்கும் பணி மலையகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.


KOTAGALA KUDA OYA AREA

தொடர்ச்சியாக கல் உடைக்கும் பணி இடம்பெற்று வருவதால் அப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவி வருவதுடன் இயற்கையும் பாதிப்புக்குளாகி வருகிறது.

கருங்கற்கள் பெரும்பாலும் கட்டிடம் கட்டும் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளுக்காகவும் கருங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

கட்டிடம் கட்டும் தேவைகளுக்காக செங்கல் உள்ளிட்ட மாற்று மூலப்பொருட்களைப் பயன்படுத்தலாம். கருங்கற்களின் தேவையை இயன்றவரை குறைக்க வேண்டும். மேலும் கருங்கல் உடைக்கும் இடங்களின் உரிமை, பயன்பாடு மற்றும் நம்பகத்தன்மை குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

கல் உடைப்பதற்காக பயன்படுத்தப்படும் பாரிய இயந்திரங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் அதிர்வு குறித்த மலைப்பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும். 

இயற்கையின் மீது செயற்கை தொடுக்கும் தாக்குதல்களால் பாதிக்கப்படப்போவது மக்களாகிய நாமும் நமது வருங்கால தலைமுறையினரும் தான். ஆகவே மக்கள் இயன்றவரை இயற்கையை அனுசரித்து செயல்படுவது எதிர்கால இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும். 

இயற்கை | கல் | வீடு | வீதி | செங்கல் | மலை | மலையகம் | அனர்த்தம் | ஆபத்து | பாதுகாப்பு | செயற்கை | மனிதன் | வாழ்க்கை | சிகரம் 

No comments:

Post a Comment