Pages

Thursday, October 25, 2018

இலங்கை | மலையகத்தின் எதிர்காலம்

மலையகத்தினதும் மலையக மக்களினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்தாக வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 1800களில் தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் இன்றும் அதே நிலையில் தொடர்வது வேதனைக்குரியது. வாக்குரிமை பறிப்பு, நாடற்றவர்களாக்கப்பட்டமை, தமிழகத்திற்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டமை, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை என்று பல்வேறு துன்பங்களைக் கடந்து இன்றைய மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 


1998 இல் பெருந்தோட்டங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டமை மலையக மக்களின் வாழ்க்கையில் மற்றுமோர் திருப்புமுனையாக அமைந்தது. அன்று முதல் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆண்ட அரசுகளோ அல்லது அரசியல்வாதிகளோ சம்பளப் பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர். இலங்கையின் ஏனைய மக்களும் அனுபவிக்கும் மாதாந்த சம்பளம், வருடாந்த சம்பள உயர்வு போன்ற உரிமைகள் மலையக மக்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டுள்ளன. 



தற்போது பெருந்தோட்டங்கள் பலவற்றில் தேயிலை உற்பத்தி குறைவடைந்து வருவதைக் காண முடியும். நட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளும் உண்டு. இதற்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்டத் தொழிலை விட்டும் பெருந்தோட்டங்களை விட்டும் வேறு தொழில்களை நாடிச் செல்வதே முக்கிய காரணம். போதுமான தொழிலாளர்கள் இன்மை, முறையான பராமரிப்பு இன்மை ஆகிய காரணங்களால் தேயிலை உற்பத்தி குறைவடைந்து வருகிறது. 

'என் பிழையும் தோட்டத்தில் கொழுந்து பறித்து கஷ்டப் படக்கூடாது' என்பதே இன்றைய தாய்மார்களின் எண்ணமாக இருக்கிறது. கல்வியின் துணையுடன் தமது பிள்ளைகளை பெருந்தோட்டங்களில் இருந்து வெளியில் கொண்டுவர ஒவ்வொரு பெற்றோரும் எத்தனிக்கின்றனர். படிப்பறிவில்லாதவர்கள் கூட வேறு வேலைகளுக்கோ அல்லது சுய தொழில்களையோ நாடுகின்றனர். மலையகத்தின் அடையாளமே தேயிலை தான். இவ்வாறான காரணிகள் தேயிலை உற்பத்தியை முற்றாகவே இல்லாதொழித்துவிடும். 

தோட்டத் தொழிலாளர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் இன்று பல்வேறு தொழில்களை நாடி செல்வதை அவதானிக்கலாம். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு செல்லுதல், வெளிநாட்டு வேலை, சில்லறை வணிகம், உணவகம், மரக்கறி உற்பத்தி, பால் உற்பத்தி என சுய தொழில்களையோ அல்லது வேறு தொழில்களையோ அவர்கள் நாடுகின்றனர். 

நிலையான வருமானம் இன்மை, குறைந்த வருமானம், சம்பளக் கணக்கீட்டில் காணப்படும் குறைபாடுகள், குறித்த கால இடைவெளியில் சம்பளம் வழங்கப்படாமை, போதுமான அளவு வேலை வழங்கப்படாமை போன்ற குறைபாடுகளால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத் தொழிலில் நீடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அடிப்படை மாதாந்த சம்பளம், நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள், மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு, விடுமுறை கால வேலைக்கான கொடுப்பனவு என அனைத்து சம்பள உரிமைகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமானால் தோட்டத் தொழிலாளர்கள் தொழிலில் இருந்து விலகிச் செல்வதைத் தடுக்க முடியும். 

தேயிலைத் தொழில் முழுமையாக இல்லாது போகுமானால் மலையகத்தின் எதிர்காலம் என்ன? பெருந்தோட்ட உற்பத்திகளுக்கு மாற்றாக எதைப் பயிரிட முடியும்? பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் விவசாயிகளாக மாறுவார்களா? அல்லது விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்கப் போகிறார்களா? தேயிலையின் வாசத்தை சுவாசத்தில் சுமந்து திரிந்த நாம் அதன் அழிவை கைகட்டி வேடிக்கை பார்க்கப்போகிறோமா? மலையக மக்களும் மலையக அரசியல் வாதிகளும் இலங்கையின் ஆட்சியாளர்களும் ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. சிந்திப்போமா??? 

இலங்கை | மலையகத்தின் எதிர்காலம்  
https://sigaram2.blogspot.com/2018/10/future-of-up-country.html 
மலையகம் | கூட்டு ஒப்பந்தம் | முதலாளிமார் சம்மேளனம் | தொழிற்சங்கங்கள் | இலங்கை அரசு | தேயிலை | இறப்பர் | பெருந்தோட்ட நிறுவனங்கள் | சம்பள உயர்வு | நல்லாட்சி | சிகரம் செய்திகள் 

No comments:

Post a Comment