Pages

Tuesday, October 2, 2018

இந்தியா | காந்தி ஜெயந்தி

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869.10.02 அன்று பிறந்தார். அறவழியில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார். இவரது பிறந்தநாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 


மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாய் புத்லிபாய். காந்தி தனது பதின்மூன்றாம் வயதில் அதே வயதுடைய கஸ்தூரிபாய் என்பவரை மணந்தார். மகாத்மா காந்திக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ் மற்றும் தேவதாஸ் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 




ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

1893ஆம் ஆண்டு முதல் 1915ஆம் ஆண்டுவரை காந்திஜி தென்னாபிரிக்காவில் தொழில் நிமித்தமாக வசித்தார். அங்கு தென்னாபிரிக்க வாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடினார். இந்தியாவில் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளார். 

காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை இரவீந்திரநாத் தாகூர் வழங்கினார். 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி மாலை 05.17 மணிக்கு மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30ஆம் திகதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சத்திய சோதனை சுயசரிதை நூல் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

இந்தியா | காந்தி ஜெயந்தி  

http://sigaram2.blogspot.com/2018/10/gandhi-jayanti.html 
#இந்தியா #காந்தி #மகாத்மா_காந்தி #காந்தி_ஜெயந்தி #விடுமுறை #அரசு #சுதந்திரம் #போராட்டம் #வரலாறு #சத்தியசோதனை #சிகரம் 

No comments:

Post a Comment